அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்
அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டியை கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைக்கிள் போட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர் தலைமை தாங்கி, சைக்கிள் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா முன்னிலை வகித்தார். இதையடுத்து போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு, செம்மண்டலம் பைபாஸ் சாலை வழியாக மருதாடு வரை சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகம் வரை வந்தனர்.
15-ந் தேதி பரிசு
இதில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் இந்த போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 15-ந் தேதி பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.