அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்
தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் முரளிதரன் பரிசு வழங்கினார்.
சைக்கிள் போட்டிகள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டிகள் இன்று நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் பிரிவில் 200 பேர், மாணவிகள் பிரிவில் 150 பேர் என 350 மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்றனர். 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பெரியகுளம் புனித அன்னால் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது தவுபிக் முதலிடமும், மாணவிகள் பிரிவில் தேனி நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வைஷ்ணவி முதலிடமும் பிடித்தனர். 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் சித்தார்தன் முதலிடமும், மாணவிகள் பிரிவில் தேனி பி.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரகதீஸ்வரி முதலிடமும் பிடித்தனர்.
பரிசளிப்பு
17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் பெரியகுளம் வி.நி. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முத்துவிஜய் முதலிடமும், மாணவிகள் பிரிவில் பழனிசெட்டிபட்டி பழனியப்பா நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பிரீத்தி முதலிடமும் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் முரளிதரன் வழங்கி பாராட்டினார். இதில், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.