பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு  பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழனி முருகன் கோவில் கோபுர பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திண்டுக்கல்

துப்பாக்கி ஏந்திய போலீஸ்

டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடுகிற பஸ்நிலையம், ரெயில்நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மிக தலமான பழனி முருகன் கோவிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மலைக்கோவிலில் தங்ககோபுரம், ராஜகோபுரம் ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது பழனி முருகன் கோவிலில் கும்பாபிேஷக பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

இதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் சோதனை செய்கின்றனர்.

கோவில், அடிவார பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரியும் நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது சபரிமலை சீசன் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கி உள்ளதால் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில், அடிவாரம் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 10-க்கும் மேற்பட்ட போலீசார் சாதாரண உடையில் கோவில் மற்றும் அடிவாரம் பகுதியில் ரோந்து செல்கின்றனர். பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமரா மூலம் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.


Next Story