தீபாவளி பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி வேப்பூர் வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வேப்பூர்,
வேப்பூரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் குறைந்த விலையில் விற்பனை செய்வதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். மேலும் வேப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனை செய்வதற்கு கொண்டு வருவது வழக்கம். இவ்வாறு விற்பனைக்கு வரும் ஆடுகளை கர்நாடகா, ஆந்திரா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், சென்னை, சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வரும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கி செல்வது வழக்கம்.
ரூ.5 கோடிக்கு விற்பனை
இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று நடைபெற்ற வாரச்சந்தைக்கு ஏராளமான ஆடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் சுமார் 6 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஆடுகளை ஏராளமான வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச்சென்று தங்கள் வாகனங்களில் ஏற்றிச்சென்றனர். இதில் ஆடுகளின் விலை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானதாகவும், நேற்று ஒரே நாளில் ரூ.5 கோடிக்குமேல் ஆடுகள் விற்பனையானதாகவும் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.