தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள் டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு


தீபாவளி பண்டிகையையொட்டி  வெளியூர் செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்  டிரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் குவிந்தது. டிரோன் மூலம் போலீசார் கண்காணித்தனர்.

கடலூர்

இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் மாவட்ட மக்கள் கடந்த வாரமாக தயாராகி விட்டனர். புத்தாடை வாங்குவதற்காக ஜவுளி கடைகளில் குவிந்தனர். தொடர்ந்து கடலூரில் உள்ள அனைத்து ஜவுளி கடைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது, பட்டாசு கடைகளிலும் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வந்து கடலூரில் தங்கி வேலை பார்த்தவர்கள், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இன்று (சனிக்கிழமை) விடுமுறை என்பதால் நேற்றே பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர்.

பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது

இதனால் கடலூர் பஸ் நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இது தவிர கடலூர் நகரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் ஜவுளி, பட்டாசுகள், மளிகை பொருட்கள் வாங்க கடலூருக்கு வந்து சென்றதாலும் பஸ் நிலையத்தில் கூட்டம் அதிகரித்தது.

முக்கிய வீதிகளிலும் கூட்டம் அதிகரித்தது. இம்பீரியல் சாலை, நேதாஜி சாலை, லாரன்ஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக இம்பீரியல் சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், திருட்டு சம்பவத்தை தடுக்கவும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் தலைமையிலான போலீசார் டிரோன் மூலம் கண்காணித்தனர்.

மாநகரில் அமைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கோபுரங்களில் இருந்தும் போலீசார் கண்காணித்தனர். குற்றப்பிரிவு போலீசார், சாதாரண உடை அணிந்து திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்

விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அங்கித் ஜெயின் அறிவுறுத்தலின் பேரில் கடைவீதி, பாலக்கரை, பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் டிரோன் கேமரா மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் பலர் உடன் இருந்தனர்.


Next Story