தீபாவளியையொட்டி இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை: வனத்துறையினர் எச்சரிக்கை
தீபாவளியையொட்டி இறைச்சிக்காக வனவிலங்குகளை வேட்டையாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
பழனி வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள், விலையுயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் ஆகியவை உள்ளன. வனப்பகுதியில் மரங்கள் வெட்டுதல், வனவிலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க பழனி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் இறைச்சி சமைத்து உண்பது வழக்கம்.
இந்நிலையில் பழனி வனச்சரகர் பழனிக்குமார் கூறுகையில், தீபாவளியையொட்டி இறைச்சிக்காக யாரும் வனப்பகுதியில் வேட்டை நாய்களுடன் புகுந்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்கு வேட்டையை தடுக்க 24 மணி நேரமும் தீவிர ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் மலையடிவார பகுதி மக்களும் சந்தேகப்படும்படி யாரேனும் வனப்பகுதியில் நுழைந்தால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்.