குருப்பெயர்ச்சியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
குருப்பெயர்ச்சியையொட்டி, கம்பம், போடியில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
குரு பகவான் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி தேனி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள குரு பகவான் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. அதன்படி, கம்பத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காசி விசுவநாதர் கோவில் வளாகத்தில் உள்ள நவகிரகம் மற்றும் குருபகவான் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது.
இதில் குரு பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த பூஜையில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ராசிக்காரர்கள் நள்ளிரவு வரை காத்திருந்து பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை கோவில் வளாகத்தில் குருவின் பெருமையும், குரு பெயர்ச்சியின் பலன்கள் என்ற தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் போடி ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்பசாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கோவில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, குரு பகவான் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.