மாசி மக பெருவிழாவை முன்னிட்டுவிருத்தாசலம் மணிமுக்தாற்றில் எம்எல்ஏ, நகரமன்ற தலைவர் ஆய்வு
மாசி மக பெருவிழாவை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுக்தாற்றில் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மசிமக பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்கு முன்பாக கிராமத்து தேவதைகளுக்கு விழா நடைபெறும். அதன்படி, கிராமத்து தேவதைகளான அய்யனார் கோவில் திருவிழா நடந்தது. தற்போது செல்லியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதை தொடர்ந்து வருகிற 14-ந் தேதி ஆழத்து விநாயகர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசி மகவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
மணிமுக்தாற்றில் ஆய்வு
மாசிமக விழாவில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அதேபோன்று, மாசி மகம் அன்று ஏராளமானவர்கள் ஆற்றுக்கு தர்பணம் கொடுப்பதற்காக வருவார்கள்.
எனவே இதற்கு மணிமுக்தாற்றை தயார் செய்யும் வகையில், அங்கு தேங்கி இருக்கும் கழிவுநீரை எவ்வாறு வெளியேற்றுவது, பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக விருத்தாசலம் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், நகர மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆலோசனை
ஆற்றில் தண்ணீர் வரத்தை தற்காலிகமாக நிறுத்தி, தூய்மை படுத்தும் பணியை மேற்கொள்வது, தர்ப்பணம் கொடுக்க ஏற்பாடு செய்தல், ஆற்றில் மின்விளக்குகள் அமைப்பது உள்ளிட்டவை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, நகராட்சி ஆணையாளர் சேகர், நகராட்சி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்.