தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு: மெரினாவில் நிலாச்சோறு திருவிழா நடந்தது


தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு: மெரினாவில் நிலாச்சோறு திருவிழா நடந்தது
x

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் ‘நிலாச்சோறு திருவிழா' நிகழ்ச்சி நடந்தது.

சென்னை

சென்னை,

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், அறிவியல் பலகை ஆகியவை இணைந்து தமிழ்நாட்டில் 'நிலாத் திருவிழா 200' என்ற நிகழ்ச்சி கடந்த 25-ந்தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 200 இடங்களில் பகுதி பகுதியாக இந்த நிலாத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் அதிநவீன தொலைநோக்கிகளுடன் பொதுமக்களை சந்தித்து இந்த நிலாத்திருவிழாவை நடத்தி வருகிறார்கள்.

நிலாச்சோறு...

சென்னை மெரினா பாரதியார் சிலை அருகே நேற்று 'நிலாச்சோறு' என்ற தலைப்பில் இந்த நிலாத்திருவிழா நடத்தப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது, 4 அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு நிலாவின் முழு உருவம் காண்பிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று நிலாவின் அழகை தொலைநோக்கி மூலம் கண்டு உற்சாகம் அடைந்தார்கள். இதேபோல், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டுவந்த உணவை மற்றவர்களுடன் பகிர்ந்தும் இந்த நிலாச்சோறு திருவிழாவை கொண்டாடினார்கள்.

நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்டு சயின்ஸ் சொசைட்டியின் மாநில ஆலோசகர் உதயன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நாளை வரை (28-ந்தேதி) இந்த நிகழ்ச்சி நடக்கிறது. பொதுமக்களுக்கு மாலை 6 மணி முதல் நிலா, வியாழன், செவ்வாய், வெள்ளி ஆகிய கோள்களையும் அன்று தெரியும் நட்சத்திர கூட்டங்களையும் காண்பிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம்.

1 லட்சம் பேர்...

இதேபோல, நிலா குறித்த அறிவியல் உண்மைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகிறோம். நிலாவில் உள்ள மலைகளையும், பள்ளங்களையும் காண்பிக்கிறோம். இங்கு 8 அங்குல கணினிமயமாக்கப்பட்ட தொலைநோக்கிகள் வரை பயன்படுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் 1 லட்சம் பேர் வரை பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் சாதனை நிகழ்வாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story