காணும் பொங்கலையொட்டிஈரோட்டில் மீன் -இறைச்சி விற்பனை அமோகம்
காணும் பொங்கலையொட்டி ஈரோட்டில் மீன் -இறைச்சி விற்பனை அமோகமாக நடந்தது.
காணும் பொங்கலையொட்டி ஈரோட்டில் நேற்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலையிலேயே இறைச்சி கடைகளில் குவிய தொடங்கினர். குறிப்பாக ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டில் கடல் மீன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
குறிப்பாக இறால் மீன்களை போட்டி போட்டு மக்கள் வாங்கி சென்றனர். கேரளா, தூத்துக்குடி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து அதிக அளவில் கடல் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இதேபோல் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் நேற்று மீன்கள் விற்பனை அமோகமாக நடந்தது. மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் அனைத்து ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு இறைச்சிகளை வாங்கிச்சென்றனர். இதனால் இறைச்சி கடைகளிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.