புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நெல்லிக்குப்பம்,
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி அதிகாலை 3 மணி அளவில் விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேவநாதசாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 5 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் திருவந்திபுரம் சாலக்கரை இலுப்பை தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூடாரத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்கு சென்று தேவநாதசுவாமியையும், மலைமீது உள்ள ஹயக்ரீவர் சாமியையும் தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
கண்ணாடி அறை உற்சவம்
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக கடலூரில் இருந்து திருவந்திபுரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) மகாளய அமாவாசையையொட்டி தேவநாத சுவாமி மற்றும் தாயார் கண்ணாடி அறை உற்சவம் நடைபெற உள்ளது.