புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்
புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் உள்ள இறைச்சி கடைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஈரோட்டில் உள்ள இறைச்சி கடைகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
புரட்டாசி மாதம்
தமிழ் மாதமான புரட்டாசி மாதம் பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகும். இந்த மாதத்தில் இந்து மதத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அசைவ உணவு வகைகளை தவிர்த்து விரதம் இருப்பது வழக்கம். புரட்டாசி மாதம் பிறப்பையொட்டி ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஈரோடு காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட், சூரம்பட்டி நால் ரோடு அருகே உள்ள ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மேலும், கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும் இறைச்சிகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால் அங்கும் பொதுமக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி காணப்பட்டதால் இறைச்சி விற்பனை மந்தமாக இருந்தது.
காய்கறி விற்பனை அமோகம்
இதற்கிடையில் புரட்டாசி மாதம் பிறப்பு எதிரொலியால், காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. இதனால், ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
அசைவத்தில் இருந்து பலர் சைவத்திற்கு மாறியதன் காரணமாகவும், தொடர் மழை மற்றும் காய்கறி வரத்து குறைந்ததாலும், காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனினும் மக்கள் தங்கள் தேவைக்கு தகுந்தாற்போல் காய்கறிகளை வாங்கி சென்றனர்.