சுபமுகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து காணப்பட்டனர்.
திருச்செந்தூர்:
சுபமுகூர்த்த தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அங்கு 50-க்கும் மேற்பட்ட திருமணமும் நடந்தன.
கோவிலில் குவிந்த பக்தர்கள்
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விழா நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில் வார விடுமுைற மற்றும் வளர்பிறை சுபமுகூர்த்த தினமான நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கோவிலில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
50-க்கும் மேற்பட்ட திருமணம்
மேலும் கோவிலில் 50-க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. கோவில் வளாகம், மண்டபங்களிலும் ஏராளமான மணமக்களுக்கு திருமணம் நடந்தது.
புதுமண தம்பதிகள் முருக பெருமானை வழிபட்டு இல்லற வாழ்வை தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே புதுமண தம்பதிகளாகவே காட்சியளித்தனர்.