தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு:சுட்டெரித்த வெயிலிலும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்


தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு:சுட்டெரித்த வெயிலிலும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தேனி

தமிழ் புத்தாண்டு

தமிழ் புத்தாண்டையொட்டி நேற்று, தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, போடி சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். போடி சுப்புராஜ் நகரில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் ஆலயத்திலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் மல்லிகை பூ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

ஆண்டிப்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் சித்திரை முதல் நாள் திருவிழா நடந்தது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது. மாவூற்று வேலப்பருக்கு பால்காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, மச்சக்காவடி, பால்குடம் மற்றும் தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் அருகே மருதமரத்தடியில் இருந்த வழிந்த ஊற்றில் பக்தர்கள் நீராடினர்.

சிறப்பு வழிபாடு

மாவூற்று வேலப்பருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை சுட்டெரித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

வீரபாண்டியில் உள்ள கவுமாரியம்மன் கோவிலில் நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களிள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதேபோல் வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், பத்ரகாளிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story