22-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பி.எஸ்.என்.எல். அதிவேக இணைய இணைப்பு ஈரோடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.329 திட்டத்தில் வழங்கப்படுகிறது


22-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி  பி.எஸ்.என்.எல். அதிவேக இணைய இணைப்பு  ஈரோடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.329 திட்டத்தில் வழங்கப்படுகிறது
x
தினத்தந்தி 2 Oct 2022 1:00 AM IST (Updated: 2 Oct 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

22-வது ஆண்டு தொடக்க விழா

ஈரோடு

பி.எஸ்.என்.எல். 22-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு ரூ.329 கட்டணத்தில் அதிவேக இணையதள இணைப்பு வழங்கப்படுகிறது.

ஈரோடு வாடிக்கையாளர்களுக்கு...

ஈரோடு பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு மாவட்ட பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பி.எஸ்.என்.எல். நிறுவனம் 1-10-2000 அன்று தொடங்கப்பட்டது. இதன் 22-வது ஆண்டு தொடக்கநாளையொட்டி பி.எஸ்.என்.எல். பல்வேறு சலுகைகளை பொதுமக்களுக்கு அறிவித்து உள்ளது. குறிப்பாக ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்ட வாடிக்கையாளர்களுக்கு என்று அதிவேக இணையதள இணைப்பு அதாவது பைபர் கேபிள் இணைப்பு ரூ.329 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த சலுகை கோவை மற்றும் ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.

கேபிள் ஆபரேட்டர்கள்

கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இந்த இணைப்பு வழங்கப்படும். மிக விரைவில் இந்த சேவையின் மூலம் ஓ.டி.டி. திரை தளங்களையும் மிகக்குறைந்த கட்டணத்தில் பெறலாம். இந்த இணைப்பு 19-12-2022 வரை ரூ.329 கட்டணத்தில் வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் 250 கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் இதுவரை 16 ஆயிரத்து 687 இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. கேபிள் ஆபரேட்டர்கள் பி.எஸ்.என்.எல். இணைப்பு வழங்கும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்படுகின்றன.

விண்ணப்பிக்கலாம்

ஏற்கனவே தரைவழி தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்கள், தங்கள் எண்ணினை மாற்றாமலேயே பைபர் கேபிள் இணையதள வசதிக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் ரூ.400-க்கு அதிகமான கட்டணங்களில் உள்ள திட்டங்களில் சேர்ந்தால் அவர்களின் மோடத்துக்கான தொகை தலா ரூ.200 வீதம் 6 மாத கட்டணத்தில் குறைக்கப்படும். இந்த இணைப்புகள் பெற விரும்புபவர்கள் www.bookmyfiber.bsnl.co.in என்ற இணையதளம், 9486617222 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கோரிக்கை அனுப்பினால் உடனடியாக சம்பந்தப்பட்ட பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தொடர்பு கொண்டு இணைப்புகள் வழங்குவார்கள்.

பி.எஸ்.என்.எல். மூலம் செல்போன் "பேன்சி" எண்கள் வெளியிடப்படுகின்றன. இதற்கான விற்பனை ஏல முறையில் 3-ந் தேதி (நாளை) முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த எண்களை பெற ஏலத்தில் பங்கேற்பவர்கள் www.eauction.bsnl.co.in என்ற இணையத்தில் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

9 மலைக்கிராமங்களுக்கு 4ஜி

பி.எஸ்.என்.எல். நிறுவனம் விரைவில் மேக் இன் இந்தியா திட்டத்தில் முழுமையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப சாதனங்களுடன் 4ஜி இணைப்புகளை வழங்குகிறது. ஈரோடு மாவட்டத்தில் தலமலை, பர்கூர், பர்கூர் வடக்கு, பர்கூர் தெற்கு, குன்றி, கூத்தம்பாளையம், உள்ளேபாளையம், குத்தியாலத்தூர், பாரபெட்டா ஆகிய குக்கிராமங்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு பூர்வாங்க பணிகள் முடிந்து உள்ளன.

இவ்வாறு பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் கூறினார். பேட்டியின் போது துணை பொதுமேலாளர்கள் பி.எஸ்.காங்கேஷ், ஆர்.பி.அண்ணாதுரை, எம்.கே.ஜெயபாரதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story