அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டிவிற்பனைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு சுங்கவரி வசூலிக்கக்கூடாதுகலெக்டர் அலுவலகத்தில் மனு
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி விற்பனைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு சுங்கவரி வசூலிக்கக்கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அந்தியூர் குருநாதசாமி கோவிலில் தேர்த்திருவிழாவையொட்டி விற்பனைக்காக கொண்டு வரப்படும் கால்நடைகளுக்கு சுங்கவரி வசூல் செய்யக்கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
அடிப்படை வசதி
பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அந்தியூர் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி தலைமையில், கட்சி நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்திருந்த கோரிக்கை மனுவில் கூறி இருந்ததாவது:-
அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா தென்னிந்திய அளவில் புகழ் பெற்றது. இந்த கோவிலில் திருவிழா அடுத்த மாதம் 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திருவிழா நடைபெறவில்லை. அதனால் இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். விழா நடக்கும் பகுதிகளுக்கு தங்குதடையின்றி மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சுங்கவரி
கடந்த காலங்களில் கால்நடைகளுக்கு சுங்கவரி வசூல் செய்வது ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் இந்த ஆண்டும் இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் குதிரைகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளுக்கு சுங்கவரி வசூல் செய்யக்கூடாது. அருகில் உள்ள மலைவாழ் மக்கள் திருவிழாவிற்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குருநாதசாமி கோவில் அருகில் உள்ள கிராம மக்கள் தங்களது வீட்டுவாசலில் கடைகள் அமைத்து, வியாபாரம் செய்வது வழக்கம். அவர்களிடமும் சுங்கவரி வசூல் செய்யக்கூடாது. சுங்க குத்தகைதாரர்கள் அரசு நிர்ணயித்த சுங்க கட்டணங்களை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். இதை மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.