திருவள்ளுவர் தினத்தையொட்டிஇறைச்சி, மதுக்கடைகள் அடைப்பு


திருவள்ளுவர் தினத்தையொட்டிஇறைச்சி, மதுக்கடைகள் அடைப்பு
x

திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று சேலத்தில் இறைச்சி, மதுபான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

சேலம்

சேலம்,

திருவள்ளுவர் தினம்

திருவள்ளுவர் தினத்தன்று இறைச்சி, மதுக்கடைகள், பார்கள் அனைத்தும் செயல்பட தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் சேலம் மாநகர் பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி, மீன் கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. அதன்படி சூரமங்கலம், அழகாபுரம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, பழைய பஸ் நிலையம், 4 ரோடு, சூரமங்கலம், பொன்னம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இறைச்சி கடைகள் மூடப்பட்டு இருந்தன.

சூரமங்கலத்தில் உள்ள மீன் கடைகள் செயல்பட கடந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்தாண்டு மீன் மார்க்கெட்டுக்கும் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக மக்கள் கூட்டம் அலைமோதும் மீன் மார்க்கெட்டு நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அசைவ பிரியவர்கள் பெரும் அவதிப்பட்டனர்.

தீவிர கண்காணிப்பு

மாநகர் பகுதியில் தடையை மீறி இறைச்சி, மீன் கடைகள் செயல்படுகிறதா? என்று மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்படி தடையை மீறி இறைச்சி கடைகள் வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது மாநகராட்சி பகுதியில் இறைச்சி கடைகள் எதுவும் செயல்படவில்லை. எனவே யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியாமல் ஒரு சிலர் நள்ளிரவில் தங்கள் வீடுகளில் ஆடு, கோழி இறைச்சி செய்தது குறிப்பிடத்தக்கது.

மதுபான கடைகள்

திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் ஆகியவைகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டு இருந்தன. இதனால் மாநகர், மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் நேற்று மூடப்பட்டு இருந்தன. இதனால் மதுப்பிரியர்களும் நேற்று பெரும் அவதிக்குள்ளானார்கள்.


Next Story