திருவாதிரை திருவிழாவை முன்னிட்டுகோவில்களில் ஆருத்ரா தரிசனம்


தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலையில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரத்திலுள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

செண்பகவல்லி அம்மன் கோவில்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று திருவாதிரை திருவிழா, ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 3.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 4 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு அபிஷேகம், 5. 30 மணிக்கு கோபூஜை, மகா தீபாராதனை, தாண்டவ தீபாராதனை நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு சிவகாமி அம்பாள், ஆனந்த நடராஜ பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மன் புற்றுக் கோவிலில் நேற்று காலையில் திருவாதிரை விழாவும், ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

எட்டீஸ்வர மூர்த்தி கோவில்

எட்டயபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட எட்டீஸ்வரமூர்த்தி ஜோதிர்நாயகி அம்பாள் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. கோவிலில் உள்ள நடராஜருக்கு அதிகாலை 3 மணியளவில் பால், தயிர், நெய் வேத்தியம், இளநீர் மற்றும் 16 வகையான அபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு தீபாரதனை நடந்தது. காலை 8 மணி அளவில் ஆனந்த தாண்டவம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நடராஜரின் சப்பர பவனி கோவிலில் இருந்து புறப்பட்டு வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தது. பின்பு தீபாராதனை நடந்தது. பூஜைகளை கோவில் சிவாச்சாரியார் பரசுராம சுப்பிரமணியன் சிவா, காசி மற்றும் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

இதே போல் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

கழுகுமலை

கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் நேற்று திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் நடைெபற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 3.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல், பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து 6.30 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால வழிபாடு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இரவு 7 மணிக்கு சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், பவுர்ணமி கிரிவல குழு தலைவர் மாரியப்பன், பிரதோஷ குழு தலைவர் முருகன் மற்றும் சீர்பாதம் தாங்கிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

கயத்தாறு

கயத்தாறு திருநீலகண்ட ஈஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 10நாட்களுக்கு முன்பு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. விழாநாட்களில் தினமும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. நேற்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு அதிகாலை 4 மணிக்கு 21 வகையான அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து கோவிலை சுற்றி கிரிவலப்பாதையில் நடராஜரின் ஊர்வலம் வந்தது. தொடர்ந்து வாரச்சந்தை சாலை, விமான சாலை, ஆஸ்பத்திரி சாலை, பழைய பேரூராட்சி அலுவலகம் வழியாக நடராஜரின் தேர்பவனி நடைபெற்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதேபோன்று அகிலாண்ட ஈஸ்வரி அம்மன் சமேத கோதண்டராமேஸ்வரர் கோவிலில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story