வைகாசி விசாகத்தையொட்டி, கோபி விஸ்வேஸ்வர சாமி கோவிலில் தேரோட்டம்
வைகாசி விசாகத்தையொட்டி, கோபி விஸ்வேஸ்வர சாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது
வைகாசி விசாகத்தையொட்டி கோபி விஸ்வேஸ்வர சாமி கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது.
விஸ்வேஸ்வர சாமி கோவில்
கோபியில் பிரசித்தி பெற்ற விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் தே்ாத்திருவிழா கடந்த 27-ந் தேதி கிராம சாந்தியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து விநாயகர் பூஜையும், 28-ந் தேதி பூத சிம்ம வாகனத்திலும், 29-ந் தேதி நந்தி காமதேனு வாகனத்திலும், 30-ந் தேதி சேஷ வாகனத்திலும், 31-ந் தேதி ரிஷப வாகனத்திலும் சாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் மாலையில் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேரானது பெருமாள் கோவில் வீதி, கடை வீதி வழியாக மீண்டும் நிலையை சென்றடைந்தது. இதில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (சனிக்கிழமை) பாரிவேட்டை, குதிரை, கிளி வாகன காட்சியும், நாளை தெப்ப உற்சவ நிகழ்ச்சியும், நாளை மறுநாள் புஷ்ப விமானத்தில் சாமி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 6-ந் தேதி மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.