வைகாசி விசாகத்தையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு:பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
வைகாசி விசாகத்தையொட்டி, முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வைகாசி விசாகம்
வைகாசி விசாகத்தையொட்டி, நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதன்படி, கண்டமனூர் பாலசுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதையொட்டி காப்பு கட்டி விரதம் இருந்த 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க காவடி மற்றும் பால்குடம் எடுக்கும் குடங்களை எடுத்து கொண்டு வைகை ஆற்றிற்கு சென்றனர்.
பின்னர் வைகை ஆற்றில் நீராடி கழுத்தில் மாலை அணிந்து பால்குடங்களை சுமந்து கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் போது பக்தர்கள் சிலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். மேலும் ஊர்வலத்தின் போது வாண வேடிக்கை நடந்தது. இந்த ஊர்வலம் கண்டமனூரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தது.
சிறப்பு வழிபாடு
இதையடுத்து கோவிலில் மூலவர் பாலசுப்பிரமணியருக்கு பால் அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இதில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல், கூடலூரில் உள்ள கூடல் சுந்தரவேலவர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி, முருகன், வள்ளி, தெய்வானைக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நேர்த்திக்கடன்
மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் சிறப்பு பூைஜ நடந்தது. இதையொட்டி காலையில் இருந்ேத கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாவூற்று வேலப்பருக்கு பால், பழம், பன்னீர் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் 'அரோகரா, அரோகரா' என கோஷமிட்டபடி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நதியா தலைமையில் அறநிலையத்துறை பணியாளர்கள் செய்திருந்தனர். வைகாசி விசாகத்தையொட்டி, மாவூற்று வேலப்பர் கோவிலுக்கு ஆண்டிப்பட்டியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.