காதலர் தினத்தையொட்டிகொடிவேரி அணையில் போலீஸ் பாதுகாப்பு
காதலர் தினத்தையொட்டி
காதலர் தினத்தையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கொடிவேரி அணை
கோபி அருகே ெகாடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையையொட்டி பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்குள்ள அணை மற்றும் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருவார்கள். அதிலும் பூங்காவுக்கு காதல் ஜோடியினர் அதிகம் வருவதுண்டு. குறிப்பாக காதலர் தினத்தன்று கொடிவேரி அணை பூங்காவுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் காதலர் தினத்தன்று அணை பூங்கா பகுதியில் நாய்க்கும், ஆட்டுக்கும் திருமணம் செய்து வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி கொடிவேரி அணை பூங்காவுக்கு காதல் ஜோடியினர் வருவார்கள் என்பதால் அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஈரோடு சத்தி மெயின் ரோட்டில் உள்ள கொடிவேரி அணை பிரிவு மற்றும் கொடிவேரி அணை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட கடத்தூர் போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதனால் காதலர்கள், கொடிவேரி அணைக்கு வந்து பூங்காக்களில் உட்கார்ந்து மகிழ்ச்சியாக பேசி சென்றனர். மேலும் அங்குள்ள பூக்கடைகளில் ரோஜாப்பூ விற்பனை அதிகரித்து காணப்பட்டது.