ஒருபுறம் பனியின் தாக்கம்; மறுபுறம் சுட்டெரிக்கும் வெயில்


தினத்தந்தி 23 Feb 2023 12:15 AM IST (Updated: 23 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காலை 9 மணி வரை பனியின் தாக்கம் நீடிக்கிறது. அதன்பிறகு வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காலை 9 மணி வரை பனியின் தாக்கம் நீடிக்கிறது. அதன்பிறகு வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

பனி தாக்கம்

பொதுவாக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் பனி சீசன் தொடங்கிவிடும். மார்கழி, தை மாதம் வரையிலும் வழக்கமாக பனியின் தாக்கம் இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் தை மாதம் முடிந்து மாசி மாதம் நடந்து வரும் நிலையிலும் பனியின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. காலை 9 மணி வரை பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக ராமநாதபுரம், தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், ராமேசுவரம், பனைக்குளம், அழகன்குளம், முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் பனியின் தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. இதன் காரணமாக காலை நேரங்களில் நடைபயிற்சிக்கு செல்வோர் மப்ளர் போட்டு முகத்தை மறைத்து கொண்டு செல்கின்றனர். சிலர் கோட் ேபாட்டுக்கொண்டு நடைபயிற்சி செல்கின்றனர். காலை நேரத்தில் பனிப்பொழிவு இருப்பதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டப்படியே செல்கின்றனர். பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் பனிப்பொழிவால் அவதிப்படுகின்றனர்.

சுட்டெரிக்கும் வெயில்

இது இப்படி இருக்க காலை 10 மணிக்கு பிறகு வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. ஆங்காங்கே சாலைகளில் கானல் நீர் தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். கொளுத்தும் வெயிலால் பொதுமக்களும் சிரமப்படுகின்றனர்.

வழக்கமாக மார்ச் மாதத்தில் இருந்து தான் வெயிலின் தாக்கம் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருக்க இரவு 7 மணியில் இருந்து மறுநாள் காலை 9 மணி வரையிலும் பனியின் தாக்கமும் அதிகமாகவே இருக்கின்றது. மாசி மாத பனி மச்சு வீட்டை துளைக்கும் என்ற ஒரு பழமொழி உண்டு.அதற்கேற்றார் போல் தான் இந்த மாசி மாதத்தில் பனியின் தாக்கமும் இருந்து வருகின்றது.

பனியின் தாக்கத்தால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் காலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சிக்கு செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் ஏராளமானோர் சளி, இருமல் உள்ளிட்டவைகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story