கம்பத்தில்கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
கம்பத்தில் கிணற்றில் குதித்து வாலிபா் தற்கொலை செய்து கொண்டார்.
கடமலைக்குண்டு அருகே வருசநாடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர், குடும்பத்துடன் கம்பத்தில், கூடலூா் சாலையில் தனியார் மகளிர் கல்லூரி பின்புறம் உள்ள தனியார் தோட்டத்தில் வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திக் (வயது 27). இவர், சரக்கு வாகனத்தில் கிளீனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர், வீட்டில் குடும்பத்தினருடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபித்து கொண்டு வெளியே சென்ற அவர் தோட்டத்தில் இருந்த சுமார் 80 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கிணற்றில் இறங்கி அவரை மீட்க முயன்றனர். ஆனால் இரவு நேரம் மற்றும் கிணற்றில் படிக்கட்டுகள் இல்லை என்பதால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கம்பம் தீயணைப்பு படையினர் மற்றும் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் தீயணைப்பு வீரா்கள் கிணற்றில் இறங்கி உடலை மீட்க முயன்றனர். ஆனால் புதர்மண்டி இருந்ததால் கிணற்றில் இறங்கி கார்த்திக்க உடலை மீட்க முடியவில்லை. இதையடுத்து மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்து விடிய, விடிய தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கயிறுகளை கட்டி கிணற்றில் இறங்கி கார்த்திக் உடலை மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.