கம்பத்தில்பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வீரப்பநாயக்கன் குளம்தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


கம்பத்தில்பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட வீரப்பநாயக்கன் குளம்தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 27 March 2023 12:15 AM IST (Updated: 27 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் வீரப்பநாயக்கன் குளத்தை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான லோயர்கேம்ப் முதல் வீரபாண்டி வரை முல்லைப் பெரியாறு பாசனம் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடியும், 5 ஆயிரத்து 190 ஏக்கர் பரப்பளவில் ஒரு போக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீரை கம்பம் பகுதிகளில் உள்ள வீரப்பநாயக்கன்குளம், ஒடப்படிகுளம், ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களில் தேக்கி வைத்து விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் கம்பம் பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் வீரப்பன்நாயக்கள் குளத்தில் கலக்கிறது. இந்நிலையில் வீரப்பநாயக்கன் குளம் பல ஆண்டுகள் தூர்வாராததால், மண்மேவி உள்ளது. மேலும் குளம் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் பருவமழை காலங்களில் முழு அளவில் தண்ணீர் தேக்க முடியாத நிலை உள்ளது. இதேபோல் ஒடப்படிகுளம், ஒட்டுக்குளங்களிலும் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கம்பம் நகரில் உள்ள குடியிருப்பு, வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் கழிவுகள் வீரப்பநாயக்கன் குளத்தை வந்தடைகின்றன. இதனால் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கண்ணாடிகள் மற்றும் மணல் மேவி காணப்படுகின்றன. இதன் காரணமாக குளத்தில் தண்ணீர் தேக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பருவ மழை தொடங்குவதற்கு முன்பு குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மணல் மேடுகளை அகற்றி குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story