பகவதி அம்மன் கோவிலில் ஓணம் விழா


பகவதி அம்மன் கோவிலில் ஓணம் விழா
x
தினத்தந்தி 23 Aug 2023 12:15 AM IST (Updated: 23 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் விழா வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் விழா வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

ஓணம் விழா

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் விழா வருகிற 28-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இதனையொட்டி 28-ந் தேதி உத்திராடம் நட்சத்திரம் அன்று பச்சை நிறப்பட்டும், 29-ந் தேதி திருவோண நட்சத்திரம் அன்று கேரள பாரம்பரிய உடையான வெண் பட்டும், 30-ந் தேதி அவிட்டம் நட்சத்திரம் அன்று சிவப்பு நிற பட்டும் அம்மனுக்கு ஓணக் கோடியாக அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

இந்த 3 நாட்களும் அதிகாலை 4.30 மணிக்கு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு அபிஷேகம், காலை 6 மணிக்கு தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீபலி பூஜை, நிவேத்திய பூஜை, உஷ பூஜை, உஷா தீபாராதனை போன்றவை நடக்கிறது.

வெள்ளி சிம்மாசனத்தில்...

அதைதொடர்ந்து மதியம் உச்சி கால பூஜையும், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.முன்னதாக காலை 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

அதனைத்தொடர்ந்து பகல் 11 மணிக்கு பகவதி அம்மனுக்கு வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள், தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மனை பல்லக்கில் எழுந்தருளச்செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளங்கள் முழங்க 3 முறை வலம் வரச்செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பின்னர் வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனை எழுந்தருள செய்து தாலாட்டு நிகழ்ச்சி, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.


Next Story