நீலகிரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


நீலகிரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x

நீலகிரியில் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அவர்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

நீலகிரி

கூடலூர்,

நீலகிரியில் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். அவர்கள் வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு மகிழ்ந்தனர்.

ஓணம் பண்டிகை

கேரளாவில் ஓணம் பண்டிகை பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஓணம் திருநாளில் மாவேலி மன்னன் மக்களை சந்திக்க வருவதாக ஐதீகம். கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

இதையொட்டி கூடலூர் பகுதியில் உள்ள புத்தூர்வயல், பொன்னானி மகாவிஷ்ணு, அய்யப்பன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து புத்தாடைகள் அணிந்து, தங்களது வீடுகள் முன்பு பல வண்ண பூக்களை கொண்டு அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் அனைத்து வகையான காய்கறிகளை கொண்டு அறுசுவை உணவு தயாரித்து, உறவினர்கள், நண்பர்களுடன் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

கோவில்களில் சிறப்பு பூஜை

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாததால், பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மலையாள மக்கள் கடந்த 10 நாட்களாக தங்களது வீட்டின் வாசலில் பல்வேறு வண்ண மலர்களை கொண்டு அத்தப்பூ கோலம் இட்டு வந்தனர்.

பண்டிகையின் முக்கிய தினமான நேற்று அதிகாலையில் எழுந்து, பெண்கள் புத்தாடை அணிந்து வீட்டு வாசல்களில் மாவேலி மன்னனை வரவேற்கும் விதமாக அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் கோவில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடுகளை நடத்தி வழிபட்டனர். ஓணம் பண்டிகையையொட்டி கோத்தகிரி கடைவீதியில் உள்ள அய்யப்பன் கோவிலில் அத்தப்பூ கோலம் போடப்பட்டு இருந்தது. மேலும் கோவிலில் சுவாமிக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு, ஓண பாயாசம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் மலையாள மக்கள் வசித்து வருவதால், நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

அத்தப்பூ கோலம்

ஊட்டியில் வசித்து வரும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டு இருந்தனர். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். அத்தப்பூ கோலத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

ஊட்டி அய்யப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கு மலையாள மக்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


Next Story