வீடுகள், ேகாவில்களில் அத்தப்பூ ேகாலமிட்டு குமரியில் ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
குமரி மாவட்டத்தில் வீடுகள், கோவில்களில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வீடுகள், கோவில்களில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகை
கேரள மாநிலத்தில் சாதி, சமயம், இன வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டுக்கான திருவோணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்திருப்பதாலும், இன்றைய குமரி மாவட்டப் பகுதிகள் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்ததாலும், நாகர்கோவில், சுசீந்திரம், கன்னியாகுமரி, தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஓணம்பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கோவில்களில் கூட்டம்
ஓணம் பண்டிகையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகாலையிலேயே எழுந்தனர். பெண்கள் வீட்டின் முன் பல வண்ண பூக்களால் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் கசவு என சொல்லக்கூடிய பாரம்பரிய ஓணப்பட்டு உடுத்தி கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
இதனால் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில்களில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. கோவில்களிலும் அத்தப்பூ கோலமிடப்பட்டு இருந்தது.
சிறப்பு அன்னதானம்
கோவில்களில் சாமிதரிசனம் செய்தபிறகு வீடுகளில் ஓணம் விருந்து அதாவது ஓண சத்யா தயாரித்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பரிமாறி மகிழ்ந்தனர். குடும்பம், குடும்பமாக அமர்ந்து ஓணம் விருந்தை ரசித்து, ருசித்தனர்.
வீடுகளில் ஓணம் விருந்து தயாரிக்க முடியாதவர்கள் பெரிய, பெரிய ஓட்டல்களில் ஓணம் சிறப்பு சாப்பாடுக்கு ஆர்டர் செய்து வாங்கினர். இதனால் ஓட்டல்களில் ஓணம் சிறப்பு சாப்பாடுக்கு ஆர்டர்கள் அதிகமாக குவிந்தன. ஒரு சிறப்பு சாப்பாடு ரூ.375 வரை விற்பனையானது. ஏற்கனவே ஆர்டர் செய்தவர்களுக்கு மட்டுமே ஓணம் சிறப்பு சாப்பாடு ஓட்டல்களில் கிடைத்தது. நேற்று ஆர்டர் செய்தவர்களுக்கும், நேரடியாக வாங்க வந்தவர்களுக்கும் ஓணம் சிறப்பு சாப்பாடு கிடைக்கவில்லை. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் நடந்தது.
விளையாட்டு
ஓணத்தையொட்டி ஓணப்பந்து, ஓண ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டுகளிலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்டனர். நாகர்கோவில் வடசேரி ஓணத் தெருவில் ஆண்கள், பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து ஓணம் விளையாட்டுகளில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஓணம்பண்டிகை வெகுசிறப்பாகவும், உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகையையொட்டி நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது.
---