ஒண்டிப்புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும்
விருதுநகரின் குடிநீர் தேவைக்கு ஒண்டிப்புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என நகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகரின் குடிநீர் தேவைக்கு ஒண்டிப்புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டும் என நகராட்சிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வினியோகம்
விருதுநகர் நகராட்சி பகுதியில் நகராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கான குடிநீர் வினியோகத்தில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், நிலத்தடி நீர் ஆதாரங்களான ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் உள்ள உறை கிணறுகள், காரிசேரி கல்குவாரி, ஒண்டிபுலி கல்குவாரி மற்றும் சுக்கிரவாரபட்டி கோடைகால குடிநீர் தேக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. இந்தநிலையில் சமீபகாலமாக நிலத்தடி நீர் ஆதாரங்களில் இருந்து அதிக பட்ச அளவில் குடிநீர் கொண்டுவரும் நிலை குறைந்துள்ளது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 30 முதல் 35 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க வேண்டிய நிலையில் குழாய் உடைப்பு, மின்தடை போன்ற பல்வேறு காரணங்களால் அங்கிருந்து கிடைக்கும் தண்ணீரின் அளவு குறைந்ததால் விருதுநகரில் குடிநீர் வினியோகத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. தற்போது ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து தினசரி 15 லட்சம் முதல் 18 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும் நிலையில் குடிநீர் வினியோகத்தை ஓரளவு சமாளிக்க கூடிய நிலை உள்ளது.
ஒண்டிப்புலி குவாரி
விருதுநகர் அருகே ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒண்டிப்புலி குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வரும் குழாய்கள் கடந்த பல மாதங்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்ததால் தற்போது குடிநீர் கொண்டு வருவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பகிர்மான குழாய்களில் உடைப்பு ஏற்படும் நிலை தொடர்கிறது.
இதனால் ஒண்டிப்புலி குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போதுள்ள நிலையில் ஒண்டிப்புலி கல் குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் ஒண்டிப்புலி கல்குவாரியில் தற்போது 67 அடி தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில் அங்கிருந்து அதிகபட்ச தண்ணீர் கொண்டு வர வாய்ப்புள்ளதால் ஒண்டிப்புலி குவாரியிலிருந்து வரும் குடிநீர் பகிர்மான குழாயை விரைந்து சீரமைத்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.