1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
திருப்பூர்,
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
1½ லட்சம் இடங்களில் பிரதிஷ்டை
இது குறித்து அவர் திருப்பூரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் 1½ லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,200 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும். இந்த ஆண்டு 'பிரிவினை வாதத்தை முறியடிப்போம், தேசபக்தியை வளர்ப்போம்' என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டு வீடுகளில் 10 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட்டனர். பின்னர் விசர்ஜன ஊர்வலத்தில் சிலைகளை கொடுத்தனர். இந்த ஆண்டு வீடுகளில் சிலை வைப்பது மேலும் அதிகரிக்கும். வர்த்தக நிறுவனங்களிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுகிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க. அரசு, விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இடையூறு செய்து வருகிறது. இருப்பினும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இந்த அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
வங்கதேசத்தினர் ஊடுருவல்
திருப்பூரில் வங்கதேச நாட்டினர், மாவோயிஸ்டுகள் சட்டவிரோதமாக தங்கு வருவது அதிகரித்துள்ளது. நாங்கள் ஒவ்வொரு முறையும் மாநகர காவல்துறையிடம் தெரிவித்துள்ளோம். தேனி, கம்பம், கோவையிலும் இவர்கள் ஊடுருவியுள்ளனர். தமிழகத்தை குறிவைத்து திட்டமிட்டுள்ளனர். அரசின் உளவுத்துறை மோசமாக உள்ளது. உளவுத்துறை உயர் அதிகாரியை மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.