ஒரே நாடு, ஒரே தேர்தல்: அனைத்து கட்சிகளும் நல்ல நோக்கத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி


ஒரே நாடு, ஒரே தேர்தல்: அனைத்து கட்சிகளும் நல்ல நோக்கத்துடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்-மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 30 Dec 2022 12:15 AM IST (Updated: 30 Dec 2022 11:48 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற குழு பரிந்துரையான ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அனைத்து கட்சிகளுடன் கலந்தாய்வு செய்து நல்ல நோக்கத்துடன் முடிவு செய்ய வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

விருதுநகர்

நாடாளுமன்ற குழு பரிந்துரையான ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அனைத்து கட்சிகளுடன் கலந்தாய்வு செய்து நல்ல நோக்கத்துடன் முடிவு செய்ய வேண்டும் என மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறினார்.

தேவை

விருதுநகரில் நிருபர்களுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நாடாளுமன்ற குழு பரிந்துரை அனைத்து கட்சியுடன் கலந்து ஆலோசனை செய்ய வேண்டியதாகும். வருகிற நாடாளுமன்ற தேர்தலுடன் பல மாநில தேர்தல்களும் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க. இதை வலியுறுத்துகிறது. நல்ல நோக்கத்துடன் இதைப் பற்றி அனைத்து கட்சிகளும் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.

ராகுல்காந்தி நடைபயணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார். 108 நாட்கள் 2,800 கிலோ மீட்டர் நடை பயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியின் நோக்கம் நாட்டு மக்களின் நலன் தான். இதுபற்றி அண்ணாமலையின் கருத்து வேதனை அளிக்கிறது.

ஒரே பார்வை

ராகுல் காந்தியும், கமலஹாசனும் சித்தாந்த ரீதியில் ஒரே பார்வையை கொண்டுள்ளனர். நடை பயணத்தில் அவர்களின் நட்பு வெளிப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் கூட்டணி ஏற்படுமா என இப்போது கருத்து சொல்ல முடியாது. கமலஹாசனை காங்கிரஸ் கட்சி மதிக்கிறது.

ராகுல் காந்தி, பிரதமரின் பலவீனத்தை பயன்படுத்த வேண்டும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கும் கருத்து ஏற்புடையதல்ல. ராகுல் காந்திக்கு நாட்டு மக்களின் நலன்தான் முக்கியம். மற்ற தலைவர்களின் பலத்தையும். பலவீனத்தை பற்றி கவலை இல்லை. பிரசாந்த் கிஷோர் கடலில் கரைந்த பெருங்காயமாக போய்விட்டார்.

தீர்வுகாண வேண்டும்

இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு நல்ல தீர்வு காண வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது செயல்பாட்டால் தனது தகுதியை நிரூபிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

முன்னதாக சின்னமூப்பன்பட்டி கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்ததுடன் வடமலைகுறிச்சியில் காங்கிரஸ் கட்சியின் 138-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்தார். இதில் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜா சொக்கர், ெரங்கசாமி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story