ஸ்பிக்நகரில் ஒரே நாடு, ஒரே உரம்: ஸ்பிக் நிறுவனத்தில் பாரத்யூரியா விநியோகம் தொடக்கவிழா
ஸ்பிக்நகரில் ஒரே நாடு, ஒரே உரம் திட்டத்தில் ஸ்பிக் நிறுவனத்தில் பாரத்யூரியா விநியோகம் தொடக்கவிழா நடந்தது.
ஸ்பிக்நகர்:
ஒரு நாடு ஒரு உரம் என்ற கொள்கை அடிப்படையில் ஸ்பிக் யூரியா என்பது பாரத் யூரியா என அழைக்கப்படுகிறது. ஸ்பிக் நிறுவனம் இந்தியாவில் முதன்முதலாக பாரத் யூரியாவை தமிழ்நாட்டில் விநியோகம் செய்கிறது. பாரத் யூரியா விநியோகம் தொடக்கவிழா ஸ்பிக் ஆலையில் நேற்று நடைபெற்றது.
விழாவில் வேளாண்மைத் துறை துணை இயக்குநர் கண்ணன், முதன்மை செயல் அதிகாரி பாலு, பொதுமேலாளர் செந்தில் நாயகம், விற்பனை அதிகாரிகள் அடைக்கலம், பாஸ்கர், நிர்வாக மேலாளர் ஜெயப்பிரகாஷ், மக்கள் தொடர்பு மேலாளர் அம்ரிதகவுரி, அலுவலர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், ஸ்பிக் நிறுவன முழு நேர இயக்குனர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ஸ்பிக் நிறுவனம் 1969-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய விவசாயத்தை பெருக்குவதற்கு தேவையான அறிவியல் பூர்வமான மற்றும் இயற்கைக்கு உறுதுணை புரியும் தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. ஸ்பிக் நிறுவனம் இந்திய கிராமங்களில் உள்ள விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றது. ஒரு நாடு, ஒரு உரம் என்ற கொள்கை அடிப்படையில் பாரத் யூரியாவான நைட்ரஜன் தரத்தை பராமரித்து பயிர்கள் செழித்து வளர உறுதுணையாக இருக்கிறது.
ஸ்பிக் ஆலையில் தினமும் 2 ஆயிரம் டன் பாரத் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டிற்கு 7 லட்சத்து 50 ஆயிரம் டன் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது பாரத் யூரியா உரம் தமிழகத்தில் 5 மாவட்டத்திற்கு 2100 டன் உர விநியோகத்தை தொடங்கியுள்ளது என்று கூறினார்.