ரெயில் மோதி ஒருவர் காயம்
நெல்லையில் ரெயில் மோதி ஒருவர் காயம் அடைந்தார்.
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின்கள் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு மாற்றி விடுவது வழக்கம். நேற்று காலையில் ரெயில் என்ஜின் மாற்றி விடும் பணி நடந்தது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒருவர் ரெயில் என்ஜின் மோதி காயம் அடைந்தார். அவரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த ரெயில்வே போலீசார் அவரை மீட்டு அவருக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸ் நெல்லை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த நபர் ஆம்புலன்ஸ் கதவை திறந்து திடீரென கீழே இறங்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை ஆம்புலன்சில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முன்னா லோக்ரா (வயது 50) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.