நாளை முதல் ஒரு வழிப்பாதை அமல்
கொடைக்கானலில் நாளை முதல் ஒருவழிப்பாைத அமல்படுத்தப்பட்டுள்ளது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் போலீஸ் துறை சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. கொடைக்கானல் அண்ணா சாலையில் உள்ள சி.பா. ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்துக்கு, போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், சுற்றுலா வேன், கார் டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், கனரக வாகன ஓட்டுனர்கள், ஏரிச்சாலையில் சைக்கிள் கடை வைத்திருப்ப்போர் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நிருபர்களிடம் கூறுகையில், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், 21-ந்தேதி (நாளை) முதல் சீசன் முடியும் வரை நகரில் உள்ள பல்வேறு சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. அதன்படி கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு வருவோர் கலையரங்கம், நகராட்சி அலுவலகம் வழியாக வெளியே வர வேண்டும். ஏரிச்சாலையில் இருந்து அப்சர்வேட்டரி வழியாக சுற்றுலா வாகனங்கள் சென்று, பாம்பார்புரம் வழியாக நகருக்குள் வர வேண்டும். மூஞ்சிக்கல், வனத்துறை அலுவலக பகுதி ஆகியவை ஒரு வழிச்சாலையாக மாற்றப்படுகின்றன. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகர் மற்றும் ஏரிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இதேபோல் தண்ணீர் லாரிகளும் பகல் நேரத்தில் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றார்.