ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


ரூ.27 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

வாணியம்பாடி அருகே கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.27 லட்சம் மோசடி செய்ததாக ஏற்கனவே தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

கிராம நிர்வாக அலுவலர் பணி

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே திம்மாம்பேட்டையை அடுத்த புல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 53). நாட்டறம்பள்ளி அ.தி.மு.க. ஒன்றிய பொருளாளர். இவரது மகன் சோமு, மருமகன் அறிவழகன் மற்றும் உறவினர் தாமோதரன், கார்த்திக் ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் பணிக்காக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடந்த தேர்வை எழுதி தோல்வி அடைந்துள்ளனர்.

இவர்கள் 4 பேருக்கும் கிராம நிர்வாக அலுவலர் பணி பெற்று தருவதாக எல்லப்பனை கடந்த 2018-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை தாலுகா வழிவளம் கிராமத்தைச் சேர்ந்த தோட்டக்கலைதுறை உதவி அலுவலர் பாலதண்டாயுதம், தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பரமசிவம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுரேஷ் ஆகியோர் மூலம் அணுகினார்.

ரூ.27 லட்சம் மோசடி

பின்னர் இதற்காக ரூ.27 லட்சத்தை பெற்றுக்கொண்ட அவர் 2 பேருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியாணை வழங்கினார். ஆனால் அது போலி பணியாணை என சில மாதங்களில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு திம்மாம்பேட்டை போலீஸ் நிலையத்திலும், திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், எல்லப்பன் புகார் அளித்தார்.

நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்பட்டதால் எல்லப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் தோட்டக்கலை உதவி அலுவலர் பால தண்டாயுதம் மற்றும் அவரது கூட்டாளிகள் பரமசிவம், சுரேஷ் ஆகியோர் பணம் பெற்றது நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் 3 பேரின் மீது நடவடிக்கை எடுக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் ஒருவர் கைது

அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கு ரூ.27 லட்சம் பணத்தை பெற்றுகொண்டு போலி பணியாணை வழங்கி மோசடி செய்த தோட்டக்கலை உதவி அலுவலர் பாலதண்டாயுதம் (55) என்பவரை கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி திம்மாம்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

மேலும் உடந்தையாக செயல்பட்ட கூட்டாளிகள் பரமசிவம் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீசார் தேடிவந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சுரேஷ் ( 40) என்பவரை கைது செய்து வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பரமசிவம் என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.


Next Story