பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது
குலசேகரம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
குலசேகரம்:
குலசேகரம் பகுதியில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3½ பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது.
நகை பறிப்பு
குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூர் மணலிவிளையைச் சேர்ந்தவர் மரிய செல்வி (வயது 60). இவர் கடந்த செப்டம்பர் மாதம் 21-ந் தேதி அதிகாலையில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் மரிய செல்வியின் கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.
மேலும் அதே நாளில் நித்திரவிளையில் மற்றொரு பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்டது. இதுதொடர்பாக குலசேகரம் மற்றும் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.
வாலிபர்கள் கைது
இதையடுத்து குலசேகரம், நித்திரவிளை போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய பாறசாலை கருமானூரை சேர்ந்த மணீஷ் (20) என்பவரை குலசேகரத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவர் ெகாடுத்த தகவலின் அடிப்படையில் முக்கிய குற்றவாளியான பாறசாலை இஞ்சிவிளையைச் சேர்ந்த செய்யது அலி மகன் யாசர் அராபத் (22) என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருளப்பன், சுகுமாரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் இரவு குலசேகரம் சந்தையில் வைத்து யாசர் அராபத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3½ பவுன் தங்கச் சங்கிலி, திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட யாசர் அராபத் மீது நாங்குநேரி, கடையம், தக்கலை போன்ற போலீஸ் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.