இல்லம் தேடி கல்வி திட்ட ஓராண்டு நிறைவு விழா
கோத்தகிரி அருகே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே இல்லம் தேடி கல்வி திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா நடைபெற்றது.
இல்லம் தேடி கல்வி
தமிழகத்தில் கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை குறைக்கவும், கற்றல் திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டம் கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பலகட்ட பயிற்சிகளுக்கு பிறகு, பள்ளிகள் அருகே குக்கிராமங்களில் கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டன. அதன்படி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் குண்டாடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சார்ந்த 10 மையங்கள் தொடங்கப்பட்டது.
இந்தநிலையில் பள்ளி மேலாண்மை குழு சார்பில், குண்டுபெட்டு கற்றல் மையம் சார்பில், இல்லம் தேடி கல்வி திட்ட ஓராண்டு நிறைவு விழா மற்றும் பாரதியார் பிறந்தநாள் விழா குண்டுபெட்டு கிராம சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. இதற்கு இல்லம் தேடி கல்வி திட்ட நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரமோத் தலைமை தாங்கி பாரதியார் படத்தை திறந்து வைத்து பேசினார்.
கலைநிகழ்ச்சிகள்
மேலாண்மை குழு துணை தலைவி சரோஜா மற்றும் இல்லம் தேடி கல்வி வட்டார பொறுப்பாளர் ஹேரி உத்தம் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் வரவேற்றார். தொடர்ந்து இல்லம் தேடி கல்வி மையத்தில் கற்று கொடுத்த பரதநாட்டியம், கரகம், நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம் உள்பட்ட 10 வகையான நடன நிகழ்ச்சிகளை மாணவர்கள் அரங்கேற்றினர்.
இதையடுத்து டேக்வோண்டா, ஓவியம், பாட்டு, இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தன்னார்வலர் ராஜகுமாரி கவுரவிக்கபட்டார். கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ஆசிரியை தனலட்சுமி மற்றும் பெற்றோர், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார். இதேபோல் பிற மையங்களிலும் நிகழ்ச்சிகள் நடந்தது.