விபத்து வழக்கில் வாலிபருக்கு ஒரு ஆண்டு ஜெயில்
சங்ககிரி:-
சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்றார். அப்போது சத்யா நகர் அருகே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக கொளத்தூர் சின்ன மேட்டூர் பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த செல்வம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த நீதிபதி பாபு கருப்பண்ணனுக்கு 1 ஆண்டு 3 மாதம் ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.