லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா வயலூர் அருகே உள்ள பூங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன், விவசாயி. இவரது மனைவி விஜயா, உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி இறந்து விட்டார்.
இதனையடுத்து அவரது பெயரில் தேசிய வங்கி ஒன்றில் ரூ.27 ஆயிரத்திற்கு நகைக்கடன் வாங்கி இருந்ததால் அதனை மீட்க வாரிசு சான்று தேவைப்படுவதால் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ந்தேதி குடும்ப அட்டை மற்றும் இறப்பு சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து இளங்கோவன் பூங்குணம் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியனிடம் மனு அளித்து உள்ளார்.
இதையடுத்து வாரிசு சான்றிதழ் தர ஆட்சேபனை இல்லை என்று கையொப்பமிட கிராம நிர்வாக அலுவலர் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அவ்வளவு பணம் தர இயலாது என்று இளங்கோவன் கூறியதால் கிராம நிர்வாக அலுவலர் அதனை குறைத்து ரூ.1,250 தருமாறு கேட்டு உள்ளார்.
ஒரு ஆண்டு சிறை
இருப்பினும் லஞ்சம் கொடுத்து வாரிசு சான்றிதழ் பெற விருப்பம் இல்லாத இளங்கோவன் இதுகுறித்து வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்து, பூங்குணம் கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் லஞ்ச பணம் பெறும் போது கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி லஞ்சம் வாங்கிய சுப்பிரமணியனுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.