எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடத்தில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் பணியாற்றியதால் பரபரப்பு
6 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடத்தில் ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் பணியாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரடாச்சேரி:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் துரப்பன கிணறுகளை அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மேப்பலம் என்ற இடத்தில் கடந்த 2001-ம் ஆண்டு கமலாபுரம் 29 என்கிற துரப்பன கிணறு அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு இந்த கிணற்றில் கச்சா எண்ணெய் கிடைக்காததால் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் பணிகளை நிறுத்தியது. இந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பகுதியில் மீண்டும் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் ஊழியர்களை கொண்டு பணிகளை செய்து வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பணிகள் குறித்து தகவல் அறிந்த விவசாயிகள் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் விவசாயிகள் ஓ.என்.ஜி.சி. பணிகள் குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறினர். இது குறித்து ஓ.என்.ஜி.சி. மேலாளர் செல்வகுமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட இடத்தில் ஊழியர்களை கொண்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. பராமரிப்பு பணி செய்வதற்கான அனுமதி பெற்ற பிறகுதான் இந்த பணிகள் கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது என கூறினார்.