தொடரும் வன்முறை சம்பவம்: 1,600 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு -போலீஸ் சூப்பிரண்டு விசாரணை


தொடரும் வன்முறை சம்பவம்: 1,600 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு -போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
x

ஜேடர்பாளையம் அருகே 1,600 பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட தொடர் வன்முறை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள வி.கரபாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்ல ஆலையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இதன் தொடர்ச்சியாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்கள், குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்கான வன்முறை சம்பவங்கள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தன.

வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

இதற்கிடையே கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்மநபர்கள் அவர்கள் மீது மண்எண்ணெய் பாட்டில்களை வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். மற்ற 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு, பகலாக துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் மீண்டும் புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர். இதற்கிடையே இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் நாமக்கல் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பிரபா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1,600 பாக்கு மரங்கள் வெட்டிசாய்ப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூர் பகுதியில் தோட்டத்திற்குள் புகுந்து மர்ம நபர்கள் பாக்குமரங்களை வெட்டி சாய்த்த வன்முறை சம்பவம் நடந்துள்ளது.

இங்கு பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி. முகவர் சவுந்தர்ராஜன் (வயது55) என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தில் நடப்பட்டு இருந்த சுமார் 1,600 பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

பின்னர் இதுகுறித்து சவுந்தர்ராஜன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் தலைமையிலான போலீசார் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன.


Next Story