ஆன்லைனில் கடன்: வாட்ஸ் அப்பில் நிர்வாண புகைப்படங்கள் - பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை


ஆன்லைனில் கடன்: வாட்ஸ் அப்பில் நிர்வாண புகைப்படங்கள் - பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2023 10:30 AM IST (Updated: 26 July 2023 11:19 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் ஆன்லைனில் கடன் வாங்கிய வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின். இவரது மகன் ராஜேஷ் (வயது 27) தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் மொபைல் ஆப் மூலம் ஆன்லைன் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். பின்னர் தான் வாங்கிய கடன் தொகை முழுவதையும் அவர் திருப்பி செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராஜேஷுக்கு கடன் கொடுத்த ஆன்லைன் நிதிநிறுவனம் மேலும் கடன் தொகை பாக்கி உள்ளதாக கூறி உள்ளது. மேலும் அவரது செல்போனில் இருந்த அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு விடுவதாக ராஜேஷை தொடர்ந்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த ராஜேஷ் சம்பவத்தன்று இரவு வயலுக்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் இருந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ராஜேஷ் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வலங்கைமான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story