கனரக வாகனங்கள், சுற்றுலா வேன்களுக்கு விதிக்கப்படும் ஆன்லைன் அபராதத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு-போலீஸ் சூப்பிரண்டிடம் உரிமையாளர்கள் மனு
தர்மபுரி:
கனரக வாகனங்கள், சுற்றுலா வேன்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஆன்லைன் அபராதங்கள்
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் வடக்கு மண்டல துணைத் தலைவரும், தர்மபுரி லாரி உரிமையாளர்கள் சங்க தலைவருமான நாட்டான் மாது தலைமையில் சுற்றுலா வேன் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதமிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வேன்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதங்கள் விதிப்பது தற்போது அதிகரித்து வருகிறது. பெட்ரோல் பங்குகள், பார்க்கிங்குகள் ஆகியவற்றில் நிறுத்தப்பட்டு இருக்கும் வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருக்கும் போதே வாகனங்களின் பதிவு எண்ணை மட்டும் குறித்து வைத்துக்கொண்டு என்ன குற்றம் என்று கூறாமல் அபராதங்கள் விதிக்கப்படுகிறது.
வாழ்வாதாரம் பாதிப்பு
மேலும் ஒப்பந்த அடிப்படையில் வடமாநிலங்களில் இயங்கி கொண்டிருக்கும் வாகனங்களுக்கு தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகிறது. சாலை விதிகளை பின்பற்றவில்லை, சீட் பெல்ட் அணியவில்லை போன்ற காரணங்களுக்காக அபராதங்கள் பெருமளவில் விதிக்கப்படுகின்றன.
இதனால் சம்பந்தப்பட்ட லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வேன் உரிமையாளர்கள் பொருளாதார இழப்புக்கு ஆளாவதுடன், வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இது போன்று ஆன்லைன் மூலம் அபராதங்கள் விதிக்கும் முறையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
மறுபரிசீலனை
வாகனத்தை நிறுத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை சரி பார்த்து, குற்றம் இருப்பின் அபராதம் விதிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். அவ்வாறு அபராதம் விதிக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட டிரைவரின் கையொப்பத்துடன் என்ன குற்றம், டிரைவர் பெயர், டிரைவிங் லைசன்ஸ் எண் ஆகியவற்றை ரசீதில் குறிப்பிட வேண்டும்.
லாரி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வேன் உரிமையாளர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்று ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை மறுபரிசீலனை செய்து, வாகன உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர்.