உயிரை விழுங்கும் 'ஆன்லைன்' சூதாட்டம்
உயிரை விழுங்கும் ‘ஆன்லைன்' சூதாட்டம் தடை எப்போது? என பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனா்.
ஆன்லைன் என்று சொல்லப்படும் இணையதளத்தை பயன்படுத்துவது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது.
அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் புத்திசாலிகள் ஆகிவிடுகிறார்கள். அதன் தீங்கு வலைகளில் சிக்கி விடுபவர்கள் இனிய உயிர்களை இழந்து போகிறார்கள்.
சூதாட்ட விளையாட்டுகள்
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர்.
இந்த வகையான சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது? என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன.
தொடரும் தற்கொலைகள்
கடந்த வாரத்தில்கூட மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் குணசீலன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல், சேலம் மாவட்டம் ஆத்தூர், உடையார் பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு என்பவரும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.
இதுவரை 43 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ஆசையை தூண்டி, விளையாட வைத்து, பணத்தை இழப்பதோடு, உயிரை மாய்க்க வைக்கும் இதுபோன்ற சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொது மக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணமே இருக்கின்றன.
தடை சட்ட மசோதா
அரசும் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வந்த நிலையில், அதனை சென்னை ஐகோர்ட்டு வாயிலாக சூதாட்ட நிறுவனங்கள் உடைத்தது. அதன்பின்னர், கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் மீண்டும் இதற்கான தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு புதிதாக ஒரு சட்டம் இயற்ற பரிந்துரை அளித்தது.
அதனை அடிப்படையாக கொண்டு, பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். பின்னர், தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
ஒப்புதல் எப்போது?
இந்த புதிய சட்டப்படி, தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் தனிநபருக்கு 3 மாத சிறை தண்டனையும், அந்த சூதாட்ட நிறுவனத்தின் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு, கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அரசு தரப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கவர்னரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளார். இந்த சட்ட மசோதாவுக்கு விரைந்து கவர்னர் ஒப்புதல் கொடுத்து, சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விழிப்புணர்வு அவசியம்
இதுதொடர்பாக மருத்துவ மனநல ஆலோசகர் டாக்டர் வந்தனா கூறும்போது, 'சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனதளவில் சோர்வடைபவர்களின் கடைசி கட்டம்தான் தற்கொலை. அதுபோன்ற நிலையில் இருப்பவர்கள் உடனடியாக மனநல ஆலோசகர்களை அணுகுவது அவசியம். அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்? என்பதை பார்த்து அதற்கேற்றபடி சிகிச்சை வழங்கப்பட வேண்டும்.
மருந்து, மாத்திரைகளினால் சிலரையும், ஆலோசனைகள் மூலம் சிலரையும் சூதாட்ட அடிமையில் இருந்து வெளியில் கொண்டுவரலாம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான முழு முயற்சிகளை அரசு கண்டிப்பாக எடுக்க வேண்டும். இந்த வகை சூதாட்டத்தில் ஆண்கள்தான் அதிகம் ஈடுபடுவதாக நினைக்கிறோம். ஆனால் இந்த விளையாட்டை எளிதில் அணுக முடியும் என்பதால், பெண்களும் இதில் அதிகம் விளையாடுகிறார்கள். அதிலும் இளம் தலைமுறையினர்தான் ஈடுபடுகிறார்கள். சூதாட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதைவிட, அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என்பதை ஆராய வேண்டும். அதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது அவசியமான ஒன்று' என்றார்.
வாய்ப்புகள் குறைவு
கிள்ளை சமூக ஆர்வலர் நீதிமணி: இன்று சாமானியர்கள் முதல் படித்தவர்கள் வரை ஏராளமானோர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூதாட்டத்திற்கு பலர் அடிமையாக உள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் முதலில் ஜெயிப்பது போல் தெரியும். ஆனால் அதில் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இது தெரியாமல் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்து வருகின்றனர். சூதாட்டத்தில் விட்டதை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற வெறியில் பலர் பணத்தை இழந்தும், நிம்மதியை இழந்தும் தவிக்கின்றனர். இந்த சூதாட்டத்தால் பலர் தற்கொலை வரை சென்றுள்ளனர். ஆகையால் ஆன்லைன் சூதாட்டத்தை நிரந்தரமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்கொலைக்கு தூண்டும் விளையாட்டு
விருத்தாசலம் நந்தகுமார்: ஆன்லைன் சூதாட்டம் ஒரு கெட்ட பழக்கமாகும். இது ஒரு போதை பழக்கமாக, இன்றைய இளைஞர்களின் மத்தியில் மாறிக் கொண்டிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் சோம்பேறிகளாக மாறி வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு தங்களிடம் இருந்த பணத்தையும் பறிகொடுத்துவிட்டு, நிம்மதியை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர். இந்த சூதாட்டம், நம்மை அடிமையாகி தற்கொலைக்கு தூண்டும் ஒரு விளையாட்டாக அமைந்துள்ளது. இதனை தடை செய்தால் வருங்கால இளைஞர்கள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்.
அதிகரிக்கும் தற்கொலைகள்
ம.புடையூர் பொன்னிவளவன்: ஆன்லைன் சூதாட்டம் நிறுவனங்களின் மோசடி மற்றும் பண பசிக்கு இளைஞர்களும், இளம்பெண்களும் பலியாகி வருகின்றனர். இந்த விளையாட்டில் பலர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து குடும்பத்துடன் நடுத்தெருவுக்கு வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் பலரது குடும்பம், கடனில் தத்தளித்து வருகிறது. இதில் பணத்தை இழந்த பலர், மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தற்போது அதிகரித்து விட்டது. இந்த கொடுமை தொடர அனுமதிக்க கூடாது. ஆன்லைன் சூதாட்டம் மதுவை விட மோசமான ஒரு கெட்ட பழக்கமாகும். ஆகையால் பல லட்சக்கணக்கான குடும்பங்களை காப்பாற்ற வேண்டுமானால் ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
அரசின் பொறுப்பு
கடலூர் புவனா: வாழ்க்கையை கூட தொடங்காத பலரின் குடும்பங்கள் ஆன்லைன் ஆதாட்டத்தால் நடுத்தெருவிற்கு வந்து கொண்டிருக்கிறது. தற்கொலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதால் உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு. பல லட்சக்கணக்கான ரூபாயையும், சொத்துக்களையும் இழந்து பலர் நடுத்தெருவில் இருக்கின்றனர். அரசு வேடிக்கை பார்ப்பதினால் தான் ஆன்லைன் சூதாட்டத்தில் பலர் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு கடந்த ஆண்டு இறுதியில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நிரந்தர தடை சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. பின்னர் அதை தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் சூதாட்டத்திற்கு எதிரான நிரந்தர தடை அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டது. அதனால் வருங்காலங்களில் தமிழகத்தில் எவரேனும் ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு முழு பொறுப்பு கவர்னரையே சாரும். எனவே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒழித்துக்கட்ட வேண்டும்
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆர்.சித்ராதேவி கூறும்போது, 'செல்போனில் 'வீடியோ' கேம்கள் விளையாடும் போது அவை மனத்துக்கும், மூளைக்கும் உற்சாகமும், புத்துணர்வும் தருவது போன்ற போதையை அளிக்கின்றன. இது நமது அறிவுக்கு சவால் விடும் விளையாட்டுகள். தற்போது 'ரம்மி' போன்ற பணம் வைத்து விளையாடும் சூதாட்ட விளையாட்டுகள் இணையதளத்தை ஆக்கிரமித்திருப்பதும், இதில் இளைஞர்கள் பலரும் அடிமையாகி இருப்பதும் வேதனை அளிக்கிறது. சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்று எண்ணி சேமித்த பணத்தையும் இழந்து கடனாளியாகி தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனை அளிக்கிறது. 'ஆன்லைன்' சூதாட்ட விளையாட்டுகளும் போதை போன்று மாறிவிட்டன. இதை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லையென்றால் இன்னும் பல உயிர்கள் பறிபோகும் அபாயம் ஏற்படும். இதனை உணர்ந்து தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்' என்றார்.