மரங்களை வெட்டுவதற்கு ஆன்லைன் மூலம் அனுமதி


மரங்களை வெட்டுவதற்கு ஆன்லைன் மூலம் அனுமதி
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரியில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என கலெக்டர் அம்ரித் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விபரம் பெற்று 89 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதைதொடர்ந்து கலெக்டர் அம்ரித் பேசும்போது கூறியதாவது:-

தோட்டக்கலைத்துறையின் கீழ் செயல்படும் அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகளின் விவரங்களை விலையுடன் கூடிய பதாகைகள் வைக்க வேண்டும். பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் விவசாய பயனாளிகளில் 13-வது தவணை தொகை பெற இயலாதவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் கூடலூர் வட்டாரத்தில் முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

முதுமலை மறுகுடியமர்வு மக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தனியாக ஒரு கூட்டம் நடத்தப்பட வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை Nilgiris Tree Cutting Service என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை மூலம் பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களை மேம்படுத்தும் திட்டம் மூலம் கூடலூரை சேர்ந்த பழங்குடியின பெண் மஞ்சுளா என்பவருக்கு ரூ.5.70 லட்சம் 35 சதவீத மானியத்தில் ஹோம்மேட் சாக்லேட் உற்பத்தி செய்வதற்காக கலெக்டர் கடன் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலா மேரி, உதவி இயக்குனர்கள் சாம்சாந்த குமார் (ஊராட்சிகள்), இப்ராகிம் ஷா (பேரூராட்சிகள்) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story