ஆன்லைன் ரம்மியை அரசு தடை செய்ய வேண்டும்
தமிழகத்தில் இதுவரை 80 பேரின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 80 பேரின் தற்கொலைக்கு காரணமான ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
2-வது நாள் நடைபயணம்
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. 3 நாள் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லில் தனது நடைபயணத்தை தொடங்கிய அவர் தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலை 2-வது நாள் பிரசார நடைபயணத்தை தர்மபுரி அருகே குரும்பட்டியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காமராஜர் பாணி
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நான் மேற்கொள்ளும் நடைபயணத்திற்கு சாதி, மதம், கட்சி ஆகியவற்றை கடந்து பொதுமக்கள் எழுச்சியுடன் கூடிய வரவேற்பு அளித்துள்ளனர். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் தர்மபுரி மாவட்டத்தில் வசிக்கும் 18 லட்சம் மக்களில் 15 லட்சம் பேருக்கு பயன் கிடைக்கும். இதை முதன்மை திட்டமாக முன்னுரிமை அளித்து தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இதற்கான சாத்தியக்கூறு இருக்கிறதா? என்று ஆய்வு செய்வதை தவிர்த்து காமராஜர் பாணியில் மக்கள் நலனுக்கான இந்த திட்டத்தை சாத்தியப்படுத்த வேண்டும். நான் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது பலரால் சாத்தியமில்லை என்று கூறப்பட்ட மத்திய தொகுப்பில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்க நடவடிக்கை எடுத்தேன்.
இலவசங்கள்
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு நீர்பாசன திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளில் கூறி வருகிறார்கள். உரிய நிலத்தை கையகப்படுத்திய பின்னரும் இதுவரை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படவில்லை. மக்களுக்கு இலவசம் வழங்குவது தொடர்பாக தற்போது விவாதம் நடந்து வருகிறது.
வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு கல்வி, மருத்துவம், வேளாண்மைக்கான இடுபொருட்கள் ஆகியவற்றை மக்களுக்கு முழுமையாக இலவசமாக வழங்க வேண்டும். மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக அளிக்கப்படும் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட வளர்ச்சியை ஏற்படுத்தாத இலவசங்களை தவிர்க்க வேண்டும் என்ற கருத்தை நாங்கள் 10 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.
ஊழல்-நிர்வாக சீர்கேடு
வாக்குகளுக்காக வழங்கப்படும், வளர்ச்சியை ஏற்படுத்தாத இலவசங்களால் இந்தியாவிலேயே அதிக கடன் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழக அரசுக்கு ரூ.11 லட்சத்து 68 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதில் நேரடி கடன் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் கோடி. ஒரு ஆண்டுக்கு கடனுக்கான வட்டி மட்டும் ரூ.97 ஆயிரம் கோடி. இந்த வட்டி தொகையை கொண்டே தமிழகத்தில் முக்கியமான 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற முடியும்.
மின்சார வாரியம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி கடனில் இருக்கிறது. ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு இதற்கு முக்கிய காரணம். அந்த சுமையை மக்கள் மீது திணிக்க கூடாது. ஆன்லைன் ரம்மியால் இதுவரை தமிழகத்தில் 80 பேர் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வேலுச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதைத்தொடர்ந்து பல்வேறு கிராமங்களுக்கு நடைபயணம் சென்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ் பொது மக்கள், குறிப்பாக பெண்கள், இளைஞர்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.