ஆன்லைன் ரம்மியை தடை சட்டம்: முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் 27-ந் தேதி கூடுகிறது


ஆன்லைன் ரம்மியை தடை சட்டம்: முதல்-அமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் 27-ந் தேதி கூடுகிறது
x

ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் 27-ந் தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பலர் ஈர்க்கப்பட்டு அதை விளையாடி வருகின்றனர். ஆனால் சிலர் அதற்கு முழுவதும் அடிமையாகி அதிக பணத்தை வைத்து விளையாடுகின்றனர். ஆனால் விளையாட்டில் தோற்று பணத்தை இழப்பதினால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் தற்கொலைகள் நிகழ்ந்தாலும் தற்போது அது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முதல்-அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை ஆகிய ஆபத்துகளை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், அவற்றின் விளம்பரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தவும் சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்படுவதாக அவர் கூறியிருந்தார்.

அவசர சட்டம்

மேலும், இந்த குழு 2 வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த குழுவில் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், கூடுதல் டி.ஜி.பி. வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசர சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் 24-ந் தேதிக்கு மேல் நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை அளிக்கும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 27-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில், நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கான ஒப்புதலை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

செஸ் ஒலிம்பியாட்

இந்த அமைச்சரவை கூட்டத்தில் சில புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, தொழில் விரிவாக்கத்திற்கு அனுமதி ஆகியவை பற்றியும் முடிவு செய்யப்படும். மேலும், வரும் ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த விளையாட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், தொடக்க விழா ஏற்பாடுகள் மற்றும் நிறைவு விழா ஆகியவற்றை சிறப்பாக நடத்துவது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பார்கள்.


Next Story