ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது


ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது
x

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது

தஞ்சாவூர்

ஆன்லைன் வர்த்தகத்தால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என கும்பகோணத்தில் விக்கிரமராஜா கூறினார்.

ஆலோசனை கூட்டம்

தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் வணிகர் உரிமை முழக்கம் மாநாடு தொடர்பான தஞ்சை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மண்டல தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். குடந்தை அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பின் தலைவர் சோழா.மகேந்திரன் வரவேற்றார். செயலாளர் வி. சத்யநாராயணன் கூட்ட நோக்கத்தின் விளக்க உரையாற்றினார்.பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது:-

ஈரோட்டில் நடைபெறுகின்ற மாநாடு நமது உரிமைகளை கேட்கக்கூடிய மாநாடு. நம் ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்ற மாநாடு. வணிகர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்ற ஒரு நோக்கத்தை கொண்டு இந்த மாநாட்டை மிகப்பெரிய அளவில் நாம் நடத்த உள்ளோம். இந்த மாநாட்டில் நம்முடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளன.

ஆன்லைன் வர்த்தகம் சவாலாக உள்ளது

இன்றைய நிலையில் ஆன்லைன் வர்த்தகம் வணிகர்களுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. வீட்டில் உட்கார்ந்த படி ஆர்டர் செய்தால் அந்த பொருள் வீடு தேடி வருகிறது. இதனால் வணிகர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வணிகர்களின் எதிர்காலமே கேள்விக்குறி போல் உள்ளது. ஆன்லைன் வர்த்தகத்திற்கு முடிவு கட்ட நாம் மாநில மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

வேலையில்லாத லட்சக்கணக்கான நபர்களுக்கு வேலை தருகின்ற வர்க்கம் இந்த வணிகர் வர்க்கம். அதனால் தான் எங்களுக்கு தேவையானதை அரசிடம் கேட்கிறோம். சாதி கொடுமைகள், மதக்கொடுமைகள், ஆகியவற்றை அடியோடு விரட்டிய, பல உரிமைகளை கேட்டு பெற்ற வரலாறு ஈரோடு மண்ணில் தான் இந்த மாநாடு நடைபெற உள்ளது.

பரிசீலித்து நடவடிக்கை

வணிகர்களை பாதுகாக்க வியாபாரிகளின் எதிர்காலத்தை வளப்படுத்த இந்த மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் நாம் விடுக்கும் கோரிக்கைகளை உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.

நாம் எதிர் கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளுக்காக வணிகர் சங்க பேரமைப்பின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சிறிய கடை முதல் பெரிய நிறுவனம் வரை தங்களது வியாபாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு விட்டு விட்டு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். நம் உரிமைகளை நிலைநாட்டுவதோடு மட்டுமல்லாமல் நமது வலிமையும் மாநாட்டில் எடுத்துக்காட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story