குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் வழங்க வேண்டும்
குழந்தை பிறந்து 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் வழங்க வேண்டும் என டாக்டர் அறிவுரை வழங்கினார்.
அணைக்கட்டு தாலுகாவில் அதிக அளவில் மலை கிராமங்கள் உள்ளன. இங்கு கர்ப்பிணி பெண்கள், பிரசவித்த தனது குழந்தைகளுக்கு கழுதை பால், சர்க்கரை தண்ணீர் உள்ளிட்டவைகளை புகட்டுவதாகவும், இதனால் இறப்பு அதிகரித்து வருவதாகவும் புகார் எழுந்தது. இதனால் குழந்தை இறப்பை குறைக்க பிரசவித்த தாய்மார்களுக்கு நேற்று அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவமனை டாக்டர் பிரீத்தி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் கவிதா மற்றும் சித்த மருத்துவர் வசந்த் மில்டன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர் பிரீத்தி ஜெயக்குமார் பேசுகையில் குழந்தைகள் பிரசவித்த 6 மாதம் வரை தாய்ப்பால்மட்டுமே கொடுக்க வேண்டும். கழுதை பால், சர்க்கரை தண்ணீர் உள்ளிட்டவைகளை கொடுக்கக் கூடாது. அப்படி கொடுக்கும்போது குழந்தை இறப்புக்கு ஆளாகும். மாட்டுப் பாலை குழந்தைகளுக்க கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். மாறாக நாட்டு வைத்தியம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.