தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி
தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பாரதீய ஜனதாவில் சேர்ந்துவிடுவார் என திருச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.
தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் பாரதீய ஜனதாவில் சேர்ந்துவிடுவார் என திருச்சியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார்.
இரட்டை இலையை மீட்டவர்
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வளர்மதி நேற்று திருச்சியில் உள்ள அவருடைய வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதா இறந்த பின்னர் மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட போது, எடப்பாடி பழனிசாமிதான் அதை மீட்டெடுத்தார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றத்தில் கருணாநிதியையும், தி.மு.க. அமைச்சர்களையும் பாராட்டி பேசுகிறார். தொகுதி பக்கம் செல்லாமல் இருக்கும் அவரது மகன் ரவீந்திரநாத், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப்பேசுகிறார். அதுபற்றி கேட்டால் தனது தொகுதியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள சந்தித்ததாக கூறுகிறார்.
பிளவுபடுத்த முடியாது
தி.மு.க.வுடன் அவர்களுக்கு உறவு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அ.தி.மு.க.வின் கொள்கைப்படி தி.மு.க.விடம் யார் உறவு வைத்துக்கொண்டாலும் அவர்களை உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள்.
இந்த இயக்கத்தை பிளவுபடுத்த நினைக்கிறார்கள். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை பிளவுபடுத்த முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே மீண்டும் அ.தி.மு.க.வை ஆட்சிக்கு கொண்டு வர முடியும். தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே இருக்கிறது. 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரில் யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு தான் பிரதமரின் ஆதரவு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா கட்சியில் சேர்ந்துவிடுவார்
மேலும், ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டால், அவர் இன்னொரு கட்சி தொடங்கி அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை பிரித்து விடுவாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, அவரை நீக்கினால் இன்னொரு கட்சி தொடங்க வாய்ப்பில்லை. அதனால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு கிடையாது. அவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்து விடுவார் என்றார்.