தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியால் தான் நல்லாட்சியை கொடுக்க முடியும்


தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியால் தான் நல்லாட்சியை கொடுக்க முடியும்
x

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியால் தான் நல்லாட்சியை கொடுக்க முடியும்

தஞ்சாவூர்

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்க தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே நல்லாட்சியை கொடுக்க முடியும் என்று அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் சேதுராமன் கூறினார்.

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. மாணவரணி (எடப்பாடி பழனிசாமி அணி) சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை மாநில இணை செயலாளர் காந்தி தலைமை தாங்கினார்.

முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. சேகர், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், முன்னாள் நகர செயலாளர் பஞ்சாபிகேசன், கூட்டுறவு அச்சக தலைவர் புண்ணியமூர்த்தி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் நாகராஜன், 51-வது வார்டு செயலாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி தலைவர் ஆனந்தன் வரவேற்றார்.

எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சி

கூட்டத்தில் அ.தி.மு.க. வக்கீல் பிரிவு தலைவர் சேதுராமன், பேச்சாளர்கள் தாம்பரம் மூர்த்தி, ஆண்டிவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர், அப்போது சேதுராமன் பேசியதாவது:-

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்மொழிக்காக போராடி தங்களது உயிரை மாய்த்துக்கொண்டவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 5-ந்தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் வீரவணக்க நாள் கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறந்த ஆட்சியை அளித்தார். விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு என்பதை உணர்ந்ததோடு, அவரும் ஒரு விவசாயி என்பதால் தான் டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார். தற்போது தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி அமையும்

2024-ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் என நாடாளுமன்ற, சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தாலும் தமிழகத்தில் குடும்ப ஆட்சி அகற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி அமையும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவை நனவாக்கும் வகையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே நல்லாட்சி கொடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி, கைத்தறி பிரிவு செயலாளர் உமாபதி, ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, மாணவரணி இணை செயலாளர் ராஜேந்திரன், துணை செயலாளர் ராஜராஜன், துணைத்தலைவர் நீலகண்டன், 5-வது வார்டு செயலாளர் சம்பத் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய செயலாளர்கள், பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story